Weapon of Mass Destruction (Story)

முந்தய நாள் இரவு பத்தரை மணி. ஸ்வாமிநாதன் வீட்டுப் புதர்.

நான்கு ரவுடிகள் உள்ளே புகுந்தனர். சேகர்பாபு தன் செல்ஃபோனில் பேசினான். “பாஸு ! ஸ்பாட்டுக்கு வந்துகினோம்… ! நாளைக்கு மத்தியானம் சாமினாதன் எப்பிடி உண்மைய கக்கறான் பாரு.. பேமண்ட் ரெடி பண்ணி வெச்சுக்கோ !”.

தனது சகாக்களிடம் திரும்பி.. “இந்தாங்கடா ! நாம நாளைக்கி மத்தியானம் ரெண்டு மணிக்குதான் வேலை ஆரம்பிப்போம். அதுவரைக்கும் மரத்தடில போய் ரெஸ்ட் எடுங்கடா”…

‘சரிங்க வாத்யாரே !” – அனைவரும் சேகர்பாபு சொன்னதை சிறமேற்கொண்டு செய்தனர்.


அடுத்த காலை. ஏழரை மணிக்குள் பால் வந்தது. பேப்பர் வந்தது. காய்கறிக்காறர் வந்து சென்றார். எட்டு மணிக்குள் வேலை செல்வோர், பள்ளி செல்வோர் எல்லாரும் பறந்தாயிற்று.

பதினொன்றரை மணி. “வாத்யாரே !” என்று ஈனஸ்வரத்தில் அழைத்தனர் சகாக்கள். சேகர்பாபு, மடியில் கட்டியிருந்த பொட்டலத்தை தூக்கி, அவர்களை நோக்கிஎறிந்தான். என்ன எழவோ.. குடித்து அடங்கினர்.

ஒன்னே முக்கால். சேகர்பாபு விசில் அடித்தான். “போலாம் ! வாங்கடா “.

தடால் !!

முன்வாசற்கதவு பிளந்து உள்ளே நுழைந்தனர்..

தடால் !!

பெட்ரூம் கதவு. உள்ளே ஸ்வாமிநாதன், பதறியடித்து எழுந்தார். “டேய்.. யாருடா. நீ.. நீங்க் க்க”.. கைகள் கட்டப்பட்டது.

“யோவ்.. சாமிநாதா.. மரியாதையா சொல்லிடு.. சின்னவரை பகைச்சுக்காதே ! யாரு சொல்லி செஞ்சேன்னு மட்டும் சொல்லு… ”

“மாட்டேன்.. மா.. மாட்டேன்…”…

“வாத்யாரே.. இவன் இப்படியெல்லாம் கேட்டா சொல்லமாட்டான்… டேய்.. எல்லாம் வெளியே போங்கடா… வாத்யாரே.. நீயும் போ !”.. என்றார் ஒரு வஸ்தாது..

அனைவரும் வெளியே போனவுடன், லுங்கியை மடித்துக்கட்டி, பனியனை மடித்துவிட்டு மீசையை முறுக்கி நம்பியார் மாதிரி சிரித்தான்.

கைகள் கட்டப்பட்ட ஸ்வாமிநாதன், பயத்துடன் நடுங்கிக் கொண்டிருந்தார்.

சுவற்றோரம் சென்றான். “தேவையில்லாம என்னை கொடுமைக்காரன் ஆக்காதே ! சொல்லிடு…”…

முடியாது என்று தலைஅசைத்தார்.

“அப்பிடியா… இந்தா.. இதுதான் உன் கதி..” என்று ஃபேன் ஸ்விட்சையும், ஏசி ஸ்விட்சையும் அணைத்துவிட்டு ஓடி வெளியே சென்றுவிட்டான்.

ஹாலில் சேகர்பாபுவும் அவன் சகாக்களும் ஃபேனுக்கடியில் தண்ணி அடிக்க ஆரம்பித்தனர்.

பெட்ரூமிலிருந்து ஸ்வாமிநாதன் கதறினார். “என்னை விட்ருங்க… நான் சொல்லிடறேன்.. தயவு செஞ்சு ஃபேனையாவது போடுங்க… நான் எல்லா உண்மையையும் சொல்லிடறேன்…”

சேகர்பாபு அந்த சகாவைப்பார்த்து புன்னகைத்தான்.. “செம ஐடியா மாப்ளே !!!!”..

அனைவரும் பெட்ரூம் நோக்கி நடந்தனர்… சென்னையில் ஒரு வீட்டில்.

—.—-

1 Comment so far

  1. Sharun (unregistered) on May 29th, 2007 @ 9:45 pm

    what happened next



Terms of use | Privacy Policy | Content: Creative Commons | Site and Design © 2009 | Metroblogging ® and Metblogs ® are registered trademarks of Bode Media, Inc.